திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள என்எஸ்பி சாலை பகுதியில் மிகப்பெரிய ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், ஹோட்டல்கள் என சிறியது முதல் பெரியது வரை ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு வந்துவிட்டால் ஒரு குடும்பத்திற்கு என்ன தேவையோ அனைத்தையும் வாங்கி விட்டு சென்றுவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும். இங்கு திருச்சி மட்டுமின்றி அருகில் உள்ள பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்கு தேவையான ஜவுளி ரகங்கள் மற்றும் பொருட்களை வாங்கி செல்வார்கள். இதனால் இந்த பகுதியில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதே போல தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல், ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகளவு இருக்கும். இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் ஜவுளி ரகங்களை தேர்ந்தெடுப்பதற்காக விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை என்எஸ்பி சாலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. குறிப்பாக என் எஸ் பி சாலை பொதுமக்கள் கூட்டத்தால் திணறியது. அவர்கள் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் கூட்டத்தால் சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், பாலக்கரை, மரக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்தினால் வாகன நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி நெருங்கி வரும் நிலையில் போக்குவரத்தை சரி செய்யவும், போக்குவரத்துக்கு இடையூரின்றி சாலையில் வாகனங்களை நிறுத்தாமல் காவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.


Comments are closed.