திருச்சி, உறையூரில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை! 3 பேர் கைது – கூட்டாளிகளுக்கு வலை வீச்சு!
திருச்சி, உறையூரில் உள்ள தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உறையூர் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்குரிய இடங்களில் , சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த பிரசாத்(35), ரியாஸ்கான் (23), இர்பான்(23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்., சோதனையில் பிடிபட்ட 3 பேர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, மருத்துவர்களின் கையெழுத்து மற்றும் ரப்பர்ஸ்டாம்ப் ஆகியவற்றை போலியாக தயார் செய்து, இணைய வழியில் வலி நிவாரணி மாத்திரைகளை குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர். அவற்றை போதை மாத்திரைகள் எனக்கூறி, பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் விற்பனை செய்துள்ளனர். இந்த வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கலக்கி ஊசி மூலம் ஏற்றிக்கொள்ளச் செய்கின்றனர். இதன் மூலம் ஒரு விதமான மயக்க நிலையும் குறிப்பாக நீண்ட நேரம் தூக்கமும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே வலி நிவாரணிகள் தூக்கத்தை ஏற்படுத்தும். என்றாலும் அவற்றை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து. எனவே, பெற்றோர்கள் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, விழிப்புணர்வுடன் மாணவர்களையும் இளைஞர்களையும் காப்பது அவசியம் என்றனர்.
Comments are closed.