திருச்சியில் நடந்த புத்தகத் திருவிழாவில் ரூ.3 கோடிக்கு புத்தகங்கள் விற்று சாதனை: வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாக நடத்தப்படும்- அமைச்சர் கே.என். நேரு…!
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி தொடங்கி அக்டோபர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
இரவு வரை நடைபெற்ற மாபெரும் புத்தக திருவிழா நிறைவடைந்தது. சுமார் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகத்தால் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் ரூ.3 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. வீரமங்கை ராணி மங்கம்மாள், அவ்வையார், எம்.எஸ்.சுப்புலட்சுமி, பரதக்கலை பால சரஸ்வதி, ஓவியத்தில் வீர நாச்சியார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், கே.பி .சுந்தராம்பாள், ராஜம் கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டாக்டர் முத்துலட்சுமி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண் ஆளுமைகளை முன்னிறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் கவிதை நாள், காப்பிய நாள், தமிழ் இசை நாள், ஓவிய நாள், இயல் நாள், நாடக நாள், நவீன இலக்கிய நாள், நாட்டார் கலை நாள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை மையப்படுத்தி சிறப்பு அழைப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு மாலை வேளைகளில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.
மேலும், கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற இந்த புத்தக திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என மூன்று லட்சம் பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்தநிலையில் நிறைவு நாளான இன்று(7-10-2024) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரங்குகளை பார்வையிட்டு வீடுகளில் நூலகம் அமைத்து அதிக நூல்களை பராமரித்த நபர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், புத்தகத் திருவிழாவிற்காக சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்களுக்கும், நினைவுப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்ற நிலையில், வரும் காலத்தில் திருச்சி மாவட்டத்தில் இன்னும் சிறப்பாக நடத்தப்படும். என்று கூறினார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, கவிஞர் நந்தலாலா, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.