திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு நேரடி விமான சேவை தொடங்கியது- பயணிகள் மகிழ்ச்சி…!( வீடியோ இணைப்பு)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய விமான சேவையை துவங்கி உள்ளது. இந்த விமானம் நேரடியாக திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு இயக்கப்படுகிறது. இதன் முதல் சேவை நேற்று சனிக்கிழமை இரவு திருச்சி விமான நிலையத்தில் துவங்கியது. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் இந்த விமான சேவை இருக்கும். இதன் துவக்க நாளான நேற்று திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு விமான நிலைய ஆணைய குழுவின் சார்பில் வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானமானது மேற்கண்ட மூன்று நாட்களில் இரவு 10-35 மணிக்கு திருச்சி வந்து இங்கிருந்து இரவு 11- 05 மணிக்கு பாங்காக்கிற்கு புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பாங்காக்கில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 46 பயணிகளும், திருச்சியில் இருந்து பாங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணிகளும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பயணம் மேற்கொண்டனர்.
Comments are closed.