கமுதி அருகே நடுரோட்டில் பெண் டிஎஸ்பியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு…!
கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார். இவர் சரக்கு வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அவரை நேற்று 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காளிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். காளிகுமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது டிரைவர் காளிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை அறிந்த அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்றனர். அப்போது கடும் கோபத்தில் இருந்த காளிகுமாரின் உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்குழுவில் இருந்த ஒரு சிலர் டி.எஸ்.பி. காயத்ரியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். அதன்பிறகு போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.