திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள பச்சைமலை பகுதியில் அமைந்துள்ளது, கோம்பை ஊராட்சி . செம்புளிச்சாம்பட்டி, மூலக்காடு, எருமைப்பட்டி, ஏரிக்காடு, குண்டூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது இந்த ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.61 ஆயிரம் செலவில் குண்டூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது என்று புதிய இரண்டு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளார். இதில், ஆச்சரியம் என்னவென்றால் குடிநீரை பிடிப்பதற்கு அப்பகுதியில் மக்கள் யாரும் இல்லை என்பதுதான் உண்மை. காரணம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே சாலை வசதி இன்றியும் மற்றும் அடிப்படை தேவைகளுக்காக 50 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டி இருப்பதால் இங்கு உள்ள மக்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு துறையூர் அருகே உள்ள செல்லிப்பாளையம், நரசிங்கபுரம் ஆகிய வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் யாரும் வசிக்காத நிலையில் ஊராட்சி நிர்வாகம் சுமார் ரூ.61 ஆயிரம் செலவில் இப்பகுதியில் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கியது பொது மக்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. அரசு நிதியை வீணடித்த ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.