திருச்சி மாத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் “அட்ரா சிட்டி” காட்டிய வாலிபரை தட்டி தூக்கியது காவல்துறை…!
திருச்சி – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மாத்தூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வாலிபர் ஒருவர் வீலிங் செய்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண் 94874 64651-ற்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு எஸ்.பி வருண்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார் மேற்கண்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் “வீலிங்” செய்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி மாவட்டம், குண்டூர், வடக்கு தெருவை சேர்ந்த குமரகுரு என்பவரது மகன் சச்சின் (19) என்பவர் மாத்தூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தது தெரிய வந்தது. அந்த வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நவல்பட்டு போலீசார் அந்த வாலிபர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ் பி அருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் பகுதியில் இதுபோன்று யாராவது மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்தால் மேற்கண்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் எஸ்பி கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.