துறையூரில் அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்க சென்ற தனி வட்டாட்சியருக்கு மிரட்டல்: போலீசில் புகார்…! ( வீடியோ இணைப்பு)
தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவில்களுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பிடாரி காவல்தாய் அம்மன் கோவிலுக்கு சொந்தமாக துறையூர் – திருச்சி சாலை முசிறி பிரிவு ரோடு ரவுண்டானா அருகே உள்ள 12 ஏக்கர் 98 சென்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கவும், அங்கு அறிவிப்பு பலகை வைக்கவும் பெரம்பலூர் அறநிலைத்துறை தனி வட்டாட்சியர் பிரகாசம் மற்றும் கோயில் செயல் அலுவலர் வேணுகோபால் ஆகியோர் சென்றனர். அப்போது துறையூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் ஒருவர், அடியாட்களுடன் வந்து இங்கு அறிவிப்பு பலகை வைக்கக்கூடாது என அறநிலையத்துறை தனி வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை மிரட்டி தாக்க முயன்றுள்ளார். இதுகுறித்து தனி வட்டாட்சியர் பிரகாசம் துறையூர் காவல் நிலையத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று பிரகாசம் குற்றம் சாட்டினார். கோவில் நிலத்தை மீட்க சென்ற தனி தாசில்தாருக்கு போதிய பாதுகாப்பு அளிக்காத காவலர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed.