திருச்சியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! போலீசாரிடமிருந்து தப்பமுயன்ற போது குற்றவாளிக்கு கால்முறிவு!
திருச்சி, தில்லைநகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். தாய் – தந்தை இறந்து விட்டதால், பாட்டியுடன் தங்கி இருந்த சிறுமி, நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரது பாட்டி பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தில்லைநகர் ஈபி அலுவலகம் அருகே காயத்தோடு நின்று கொண்டிருந்த சிறுமியை பார்த்துள்ளார். அச்சிறுமியிடம் விசாரித்தபோது இளைஞர் ஒருவர் பஸ்ஸில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதும், பின் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் அடியில் வைத்து விடிய விடிய பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து தில்லை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவான நபரை உடனடியாக பிடிக்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளியை தேடிவந்த தனிப்படை போலீசார் சிதம்பரத்தில் இருந்த திருச்சி உய்யக்கொண்டான் திருமலை ஆதிநகரை சேர்ந்த சின்ன ராஜா என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.போலீசார் பிடியிலிருந்து தப்ப முயன்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்த்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.