திருச்சி, திருவெறும்பூர் அருகே தனியார் பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயம் ( வீடியோ இணைப்பு )
திருச்சி திருவெறும்பூர் அருகே வேங்கூரில் செல்லம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு திருச்சி மட்டுமில்லாது சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையில், திடீரென மேற்கூரையின் கான்கிரீட் பூச்சி பெயர்ந்து விழுந்துள்ளது. அப்போது ஃபேன் ஓடிக்கொண்டிருந்ததால், அந்த பேனில் பட்டு கான்கிரீட் துகள்கள் தெரித்தது. இதில், துவாக்குடியை சேர்ந்த பாண்டியன் மகன் நிரஞ்சன், லாவண்ய சேரன், தர்ஷன் உட்பட ஐந்து மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இன்நிலையில் இச்சம்பவம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததும், அடிபட்டது தங்கள் குழந்தைகளாக இருக்குமோ ? என்ற அச்சத்தில் பலரும் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு போன் மூலம் விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து திருவரம்பூர் போலீசருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.