திருச்சி, திருவெறும்பூர் பெல் கைலாசபுரம் பகுதியில் கிறிஸ்தவ மகளிர் சபை (புனித அடைக்கல மாதா கன்னியர் சபை) செயல்பட்டு வருகிறது. இந்த சபைக்கு சொந்தமான நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விட்டதாகவும், நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் அச்சபையின் நிர்வாகி பவுலின் பாத்திமாதேவி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் இலந்தைப்பட்டி மற்றும் காந்தலூர் கிராமங்களில் எங்கள் சபைக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் எடுத்தது போக 6 ஏக்கர் 88 சென்ட் நிலம் மீதியிருந்தது. அந்த நிலத்தை திருவெறும்பூர் அருகேயுள்ள பழக்கனாங்குடி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் போலி ஆவணங்கள் மூலம் பட்டா தயாரித்து கடந்த 2018 ஆம் ஆண்டு, மோகன் பட்டேல் என்பவருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மகேந்திரனின் மனைவி சங்கீதா மற்றும் அப்போதைய திருவெறும்பூர் சார் பதிவாளர்கள் ஆனந்தராஜ், அடைக்கலராணி, இனிகோ ராஜேந்திரன், குழந்தைசாமி உள்ளிட்டோர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் சபைக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி மாவட்ட (நில அபகரிப்பு தடுப்பு பிரிவு) குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் நில மோசடி புகாரில் சிக்கிய மகேந்திரனின் மனைவி சங்கீதா மற்றும் நிலத்தை வாங்கிய மோகன்படேல் ஆகிய 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த நில மோசடி வழக்கில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments are closed.