திருச்சி எம்ஜிஆர் நகரில் வசித்தவர் துரை என்கிற துரைராஜ். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன.
இவரை போலீசார் தேடிவந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் சுற்றி வளைத்த நிலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். இந்தநிலையில் திருச்சி மாவட்டம் எட்டரை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் தான், துரையை போலீசாருக்கு காட்டி கொடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக முருகேசனுக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. முருகேசனின் மனைவி சசிகலா, துரையின் உறவினர் ஆவார். இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனை நடந்து கொண்டிருந்தபோது துரையின் மனைவி அனுராதா அங்கு சென்றுள்ளார்.
அப்போது அனுராதா, முருகேசனை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.8000, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள அனுராதா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அனுராதா வீட்டில் ரூ.10 லட்சம் இருந்துள்ளது. அந்தப் பணம் குறித்து போலீசார் கேட்டதற்கு அனுராதா உரிய பதில் அளிக்கவில்லை. இதுதொடர்பாக வருமான வரி துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் அனுராதா வீட்டிற்கு சென்று விசாரணை செய்ததில் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்தனர். முருகேசனை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அனுராதா மற்றும் முருகேசனின் மனைவி சசிகலா ஆகிய இருவரையும் சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.