Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூர் காட்டூரில் கருணாநிதி திருவுருவ சிலை- முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்…!

முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில்  திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் ஆயில் மில் செக்போஸ்ட் அருகே கருணாநிதிக்கு  8 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டது. இந்த திருவுருவ சிலையை கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு இன்று(07-08-2024) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.  அப்போது  நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி.  ஆகியோர் உடனிருந்தனர்.  பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தொகுதிக்கு ஒரு சிலை நிறுவ வேண்டும் என்பதன் அடிப்படையில் மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு இடங்களில் சிலைகள் ஏற்கனவே நிறுவப்பட்டு உள்ளது. தற்போது திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூரில் கலைஞரின் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை ஓராண்டு சாதனை அல்ல. ஒரு நூற்றாண்டு ஆனாலும் மறையாது. சிலையை சுற்றி கலைஞர் 13 தேர்தல்களில் வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில்  13 பொன்மொழி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.

கலைஞரின் நூற்றாண்டு விழாவில் 100 நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு காரணமாக இருந்த கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விழாவில் கலந்து கொண்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் இலக்கான வரும் 2026 -வது ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்போம்.  இவ்வாறு அவர் கூறினார்.  விழாவில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டலக்குழு தலைவருமான மு.மதிவாணன்,  எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.  சேகரன், நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், செங்குட்டுவன், லீலா வேலு, மூக்கன், திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, பகுதி  செயலாளர்கள் நீல மேகம், கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.எம்.ஜி.விஜயகுமார், பாபு, மணிவேல், மெடிக்கல் மோகன், டி.பி.எஸ்.எஸ்.ராஜ்முகமது, சிவக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.கே.கார்த்திக்  மற்றும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு கையில் கொடிகளை ஏந்தியும், பலூன்களை பறக்க விட்டும் கலைஞர் வாழ்க என கோஷமிட்டனர்.  கருணாநிதி சிலை திறப்பு விழாவை ஒட்டி திருச்சி காட்டூர் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.  விழா ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்