Rock Fort Times
Online News

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிப்பு…!

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக 29-வது வார்டைச் சேர்ந்த ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 97 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைப்பற்றினர். இதனை அடுத்து கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார்.  உடல் நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சமீபத்தில் மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.  இதனால், கோவை மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளராக 29-வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.  இதேபோல, திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 51 வார்டுகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பின்னர் நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து இவர் மீது, திமுக கவுன்சிலர்கள் பலர் தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டும், மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளாததால் தீர்மானம் கைவிடப்பட்டது. இதையடுத்து மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, திருநெல்வேலி மேயர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்