Rock Fort Times
Online News

‘ தெகிடி’ படத்தில் நடித்த நடிகர் பிரதீப் கே.விஜயன் திடீர் மரணம்- பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்…!

கடந்த 2013 -ம் ஆண்டு, நடிகர் மிர்ச்சி சிவா வசுந்தரா காஷியாப் நடிப்பில், கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ‘சொன்னா புரியாது’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே.விஜயன். ‘தெகிடி’, ‘வட்டம்’, ‘டெடி’, ‘லிப்ட்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சென்னையில் வசித்து வந்த பிரதீப் கே.விஜயன், கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் எடுக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், காவல்துறை உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் பிணமாக கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். பிரதீப் கே.விஜயன் திடீர் மரணம் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்