Rock Fort Times
Online News

மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – திருச்சி எஸ்.பி. எச்சரிக்கை…!

திருச்சி மாவட்டம் பனையகுறிச்சியை சேர்ந்த ரவுடி கொம்பன் என்கிற ஜெகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை தவறாக வழி நடத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு வந்ததாகவும் அவர் மீது புகார் இருந்தது. இந்நிலையில்,
“கொம்பன் டீம்” என்கிற பெயரில் சிலர் இன்ஸ்டாகிராமில் ரெட் அலர்ட் என்றும், சம்பவங்கள் தொடரும், காத்திரு போலீஸ் எனவும் ஒரு வீடியோவும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் புகைப்படத்தை வைத்து தலைகள் சிதறும் என எழுதி மிரட்டல் விடுக்கும் வகையில் மற்றொரு வீடியோவும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக நான்கு சிறுவர்களை போலீசார் பிடித்தனர். பின்னர், போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் அவர்களுக்கு திருந்த ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் இளைஞர்கள் தங்களுக்கு அதிகமாக லைக் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வீடியோக்கள், பைக் சாகசங்கள் போன்றவற்றை செய்கின்றனர். இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அதனால் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற வீடியோக்களை இனி யாரும் வெளியிட வேண்டாம். மேலும், சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்