சேலம் அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் பேருந்து மோதி தர, தர வென இழுத்துச் சென்ற கோர விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பலி…!
சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டியில் இருந்து இன்று(12-06-2024) காலை வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அந்த பேருந்து வலசையூர் அருகே சுக்கப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி எதிரே சென்றபோது முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. லாரிக்கும், தனியார் பேருந்துக்கும் இடையே சேலம் வீராணம் அருகே உள்ள பூமனூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 35) அவரது மனைவி வேதவல்லி (26) அவர்களது குழந்தைகள் திலீப், சின்னத்துரை ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், அவர்களுக்கு அருகே மற்றொரு மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையுடன் சென்று கொண்டு இருந்தனர். அப்போது தனியார் பேருந்து வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி இரண்டு பைக்குகள் மீதும் மோதியது. இதில் இரண்டு பைக்குகளும் பேருந்துக்கு அடியில் சிக்கி கொண்டது.
அப்போதும் பேருந்து நிற்காமல் தரதரவென 2 பைக்குகளையும் இழுத்துச் சென்று முன்னால் சென்ற லாரியில் மோதி நின்றுள்ளது. இந்த கோர விபத்தில் 3 வயது குழந்தையுடன் வந்த தம்பதி மற்றும் வேதவல்லி ஆகியோர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். லட்சுமணன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் திரண்டு அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணம் செய்த நான்கு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் மற்றும் வருவாய் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான தம்பதி மற்றும் குழந்தையின் பெயர் விவரம் எதுவும் தெரியவில்லை. அவர்கள் சென்ற பைக்கின் பதிவு எண்ணை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் தப்பி ஓடி விட்ட நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.