Rock Fort Times
Online News

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்க தடை…!

கோவை , திருச்சி நெல்லை, மதுரை, குமரி உள்பட முக்கிய இடங்களுக்கு சென்னையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆம்னி பேருந்துகள் சென்னைக்கு வந்து செல்கின்றன. தொடர் விடுமுறை, முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்நிலையில் தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஓடும் ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து விதிகளின்படி தமிழ்நாடு வாகன பதிவு எண் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஓடும் கணிசமான ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண்ணுடன் இல்லாமல் கர்நாடகா, புதுச்சேரி, அஸ்ஸாம் உள்பட வேறு மாநிலங்களில் பதிவு செய்து ஓடுகிறது. இதனால், வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் அளித்திருந்தது.

ஆனால், தமிழ்நாடு பதிவெண் இல்லாமல் தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் ஜூன் 14ம் தேதி முதல் மாநிலத்தில் இயக்க அனுமதி இல்லை என அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம்1988-ன் பிரிவு 88 (9) கனரக ஒப்பந்த வாகனங்கள் குறிப்பாக ஆம்னி பேருந்துகளுக்கு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு (ஏஐடிபி) வழங்க அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு அனுமதி பெற்ற வாகனங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படாமல் பயணிகள் பேருந்துகள்போல் மின்னணு முன்பதிவு நிறுவனங்கள் மூலம் பயணச்சீட்டுகளை வழங்கி, கட்டணத்தை வசூலிக்கின்றன. இவ்வாறு நிபந்தனைகளை மீறுவதன் மூலம் மாநில அரசுக்கு கணிசமான வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, ஏஐடிபி வாகனங்களின் இயக்கத்தை நெறிப்படுத்தும் நோக்கில் நாளை (ஜூன் 13) முதல் அனைத்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் எப்போதும் சுற்றுலா பயணிகளின் பட்டியலை மின்னணு வடிவிலோ அல்லது காகித வடிவிலோ வைத்திருக்க வேண்டும். அதில் ஒவ்வொரு சுற்றுலா பயணிகள் புறப்படும் இடம் மற்றும்சேருமிடம் பற்றிய விவரங்கள் இருக்கும் வகையில் பதிவுகளை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஓராண்டுக்கான பயண விவரங்கள் வைத்திருப்பதோடு, அதிகாரிகளின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மோட்டார் வாகன துறை, மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடி உள்ளிட்ட இடங்களில் தமிழகத்துக்குள் பயணித்த விவரங்கள், சுற்றுலா முடிவுறும்போது வெளியேறும் விவரம் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இவ்வகை அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்வதற்கு 3 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் 652 அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்ற வாகனங்களில் 105 வாகனங்கள் மட்டுமே தமிழகத்தில் மறுபதிவு செய்து, டிஎன் என்று ஆரம்பிக்கும் பதிவெண் கொண்டு தமிழகத்துக்குள் இயங்க அனுமதி சீட்டும் பெற்றுள்ளன. மீதமுள்ள 547 வாகனங்கள் விதிகளை மீறி இயங்குகின்றன. எனவே, வருகிற 14-ம் தேதி நள்ளிரவு முதல் உரிய தமிழக பதிவெண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே முறையற்ற வகையில் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இயங்கும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் இனி பயணிகள் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறி பயணம் செய்தால் அரசு அதற்கு பொறுப்பேற்காது. மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு அந்தந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்