Rock Fort Times
Online News

ரூ.1,100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது – விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாகம்…!

சென்னைக்கு அடுத்து அதிக முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி விமான நிலையம் ரூ.1,100 கோடி செலவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய முனையம் அமைக்கப்பட்டது. விமான நிலைய புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2 -ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஆனால், சில தொழில்நுட்ப வேலைப்பாடுகள் காரணமாக புதிய முனையம் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. எஞ்சிய வேலைகளும் முடிவுற்ற நிலையில் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று(11-06-2024) முதல் செயல்பட தொடங்கியது. அதன் பின்னர் இன்று காலை 6 மணி முதல், அனைத்து விமானங்களும் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்பட்டது. அப்போது விமானங்களின் மீது தண்ணீரை பீச்சி அடித்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் இனி புதிய முனையத்தில் இருந்து செயல்படும். 75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில், ஆண்டுக்கு 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு, 3,480 பயணிகளை கையாள முடியும். 106 இமிகிரேஷன் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 ஏரோ பிரிட்ஜ்கள் உள்ளன. முதற்கட்டமாக 5 ஏரோ பிரிட்ஜ்களை பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 5 ஏரோ பிரிட்ஜுகளும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது. புதிய முனையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால், பஸ் சேவை இயக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு, 17.60 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர். இதில், சர்வதேச பயணிகள் மட்டும், 13.50 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய முனையத்தின் மூலம் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்