Rock Fort Times
Online News

சென்னையில் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் படுகொலை…!

சென்னையை அடுத்த மாங்காடு அம்பாள் நகர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ராஜாஜி(45). இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணியின் தலைவராக இருந்து வந்தார். இவரது மனைவி கலா.  இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் குமணன்சாவடியில் உள்ள டீக்கடையில் அமர்ந்து ராஜாஜி
டீ குடித்து கொண்டிருந்தார்.  அப்போது லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி டீக்கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராஜாஜியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த கொலையை கண்டதும் கடைக்குள் மற்றும் வெளியே இருந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி நாலாபுறமும் சிதறி  ஓடினார்கள்.  இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட ராஜாஜி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாஜி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதையடுத்து அவரது குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளும் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி போலீசார் அவர்களை அமைதிப்படுத்தினர்.  மேலும், அவரை கொலை செய்தது யார்?, எதற்காக கொலை செய்தனர்?  என்று விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்