திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள டீ கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 1.400 கிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பறிமுதல் செய்த அலுவலர்கள், டீக்கடையில் இருந்த மாரியப்பனிடம் விசாரணை நடத்திய போது, திருச்சி நந்தி கோயில் தெருவை சேர்ந்த ரஜினி என்ற பெரியண்ணா என்பவர் மூலம் ஆளவந்தநல்லுாரில் உள்ள ஒரு மளிகை கடையில் வாங்கியதாக கூறினார். அதன் அடிப்படையில் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில், அந்த மளிகை கடையின் உரிமையாளரான ஜாஹீர் உசேன் மற்றும் அவர் மகன் ரியாஸ் முகமது ஆகிய இருவரும் தங்களது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. மேலும், அவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் சென்று கடைகளுக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்தது. அதன்பேரில், ஆட்டோக்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும், சுமார் 65 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும், இந்த குற்ற செயலில் ஈடுபட்ட மேற்குறிப்பிட்ட 4 பேரையும் திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் உரிய சட்டப்படியான மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, செல்வராஜ் மற்றும் கந்தவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments are closed.