அரசு பேருந்தில் பயணி தவறவிட்ட 10 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த திருச்சி டிரைவர், கண்டக்டர்- குவியும் பாராட்டுக்கள்…!
சென்னை மாதவரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை திருச்சி உறையூரைச் சோ்ந்த எஸ்.ரமேஷ் ஓட்ட, திருச்சி காட்டூரைச் சோ்ந்த ஆா்.கோபாலன் என்பவா் நடத்துநராகப் பணியாற்றினாா். இந்தப் பேருந்தில், பெரம்பலூா் வடக்கு மாதவி சாலை சாமியப்பா நகரைச் சோ்ந்த ச.மதீனா என்பவா், தனது தாய், பாட்டியுடன் சென்னை மாதவரத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைககளைக் கொண்ட துணி பையுடன் பயணம் செய்தார். பெரம்பலூரில் இறங்கிய அவர், பையை பேருந்திலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கி விட்டாா். அந்த பேருந்து அதிகாலை திருச்சி கண்டோன்மென்ட் கோட்ட போக்குவரத்து பணிமனைக்கு வந்தபோது, அதில் கேட்பாரற்று கிடந்த பையை ஓட்டுநரும், நடத்துநரும் எடுத்து பார்த்தனர்.
அப்போது அந்த பையில், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்ததையடுத்து, அதனை பணிமனை பாதுகாவலரிடம் ஒப்படைத்தனா்.
இதனிடையே தவறவிட்ட பையைத் தேடி மதீனா திருச்சி பணிமனைக்கு வந்தாா். அவா்களிடம் 81.150 கிராம் தங்க மற்றும் 149.100 கிராம் வெள்ளி நகைகள் உள்ளிட்டவை அடங்கிய துணிப் பையை ஓட்டுநா் ரமேஷ், நடத்துநா் கோபாலன் ஆகியோா் ஒப்படைத்தனா். அப்போது, திருச்சி கோட்ட மேலாளா் ஜேசுராஜ், கிளை மேலாளா் சரவண பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா். அப்போது அந்த பயணி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார். நேர்மையாக செயல்பட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Comments are closed.