சென்னை ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை காந்தி 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவன் நாயர் (68). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பிரசன்னா (63). இவர்களது மகன் ஹரிஓம் ஸ்ரீ. இவர் திருமுல்லைவாயலில் ஆயுர்வேத சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். அதோடு பூந்தமல்லியில் தனியார் மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று ஹரிஓம் ஸ்ரீ வெளியே சென்றிருந்தார். சிவன் நாயர், மனைவி பிரசன்னாவுடன் வீட்டில் இருந்தார். அன்று இரவு பெண் ஒருவர் அவர்களது வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், மகன் ஹரி ஓம் ஸ்ரீக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பெற்றோர் உடல்களை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்த தகவலின்பேரில், ஆவடி காவல் துணை ஆணையர் ஐமான் ஜமால், உதவி ஆணையர் அன்பழகன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், படுகொலை செய்யப்பட்ட தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.