சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் தவறி விழுந்த குழந்தை- பத்திரமாக மீட்ட இளைஞர்கள்…!
சென்னையில் உள்ள போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. இதனிடையே, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் ஒரு வயது குழந்தை ஒன்று தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் அந்த குழந்தை தவறி மேற்கூரை ஒன்றில் விழுந்து கிடந்தது. இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மட்டுமின்றி அந்தப் பகுதியே பரபரப்பானது. எப்படியாவது அந்த குழந்தையை உயிருடன் மீட்டு விட வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினர்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பு வழியாக ஏறிய இளைஞர்கள் குழந்தையை நெருங்கினர்.

அப்போது குழந்தை மேற்கூரையில் லேசாக சறுக்கியது. அதைக் கண்ட பெண்கள் அச்சத்தில் கூச்சல் இட்டனர். அதுவரை சாந்தமாக இருந்த குழந்தை அழத்தொடங்கியது. உடனே, இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதன் பிறகே அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சென்னையில் இன்று நடந்த இந்த சம்பவம் சினிமாவில் வரும் காட்சிகளைப் போல திக்…திக்…என்று இருந்தது.

Comments are closed.