நீலகிரி தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு கேமரா செயலிழப்பு- கட்சியினர் அதிர்ச்சி…!
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த அறைகளுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ” சீல்” வைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீஸாா், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் உள்ளூா் காவல் துறையினா் உள்பட 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினா் மற்றொரு அறையில் இருந்து அங்குள்ள திரையின் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை இந்த திரைகளில் எதுவும் தெரியாமல் சிக்னல் குறைபாடு எனக் காட்டியுள்ளது. இது 20 நிமிடங்கள் வரை நீடித்தது. இதனால் அங்கிருந்த அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான மு.அருணா கூறுகையில், உதகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள 173 கண்காணிப்பு கேமராக்களும் நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 26 நிமிடங்கள் செயல்படவில்லை. உடனடியாக தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் கோளாறு சரி செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்து இருந்தாலும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை. எந்த விதி மீறலும் நடைபெற வாய்ப்பு இல்லை என்றார். இந்த தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா, பாஜக சார்பில் தற்போதைய மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.