திருச்சியில் பெண் உள்பட 2 பேரிடம் ஆன்லைனில் ரூ.24 லட்சம் மோசடி…!
திருச்சி கருமண்டபம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி ஜான்சி பிரியங்கா தங்கம் (வயது 32). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய செல்போனுக்கு ஒரு வாட்ஸ் அப் நம்பர் வந்தது. அதில், குறைந்த அளவு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் முதலில் குறைந்த அளவு ஒரு தொகையை செலுத்தி உள்ளார். அந்த பணத்திற்கு கூடுதலாக ரூ.230 வந்தது. இதனை அடுத்து ஜான்சி பிரியங்கா தொடர்ந்து ரூ.7 லட்சத்து 33 ஆயிரத்தை ஆன்லைனில் செலுத்தினார். அதன் பிறகு அதற்குரிய கூடுதல் தொகை எதுவும் வரவில்லை. செலுத்திய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜான்சி பிரியங்கா சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதேபோன்று திருச்சி பொன்மலைப்பட்டி காந்தி நகரை சேர்ந்த மரிய மார்ட்டின் இருதயராஜ் (63) என்பவர், சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட ஒரு எண்ணிற்கு முதலில் ரூ.10,500 செலுத்தியுள்ளார். அந்தத் தொகைக்கு அவருக்கு கூடுதல் தொகை கிடைத்துள்ளது. இதனை நம்பி ரூ.16 லட்சத்து 51 ஆயிரத்து 572 பணத்தை முதலீடு செய்தார். ஆனால் முதலீடு செய்த பணம் திருப்பி வரவில்லை. இதுகுறித்து மரிய மார்ட்டின் இருதயராஜ் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். மேற்கண்ட 2 புகார்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.