திருச்சி ஸ்ரீரங்கம் பகுதிக்கு உட்பட்ட விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால் அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். நேற்றுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் அந்த மையத்திலிருந்து தப்பியுள்ளார். நேற்று இரவு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற போது -ஸ்ரீரங்கம் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அவரிடம் விசாரணை நடத்திய போது கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறிச்சென்றவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அவரை மீட்ட காவல்துறையினர் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் கழுத்தில் கொஞ்சம் பலமாக அறுத்துக் கொண்டதால், 30 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து உதவி ஆணையர் நிவேதா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.