Rock Fort Times
Online News

தமிழகம், புதுச்சேரியில் 35 ஆயிரம் கி.மீ.ஆதியோகி ரத யாத்திரை- 36 இடங்களில் மஹா சிவராத்திரி கொண்டாட்டம்…!

கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரத யாத்திரை தமிழகம், புதுச்சேரியில் 35,000 கிலோ மீட்டர் பயணிக்க உள்ளது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட 8 இடங்களில் நேரலை ஒளிபரப்புடன் கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ராஜ் பிரகாஷ் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், ஆதியோகி ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களுடன் கூடிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தொடங்கி வைத்தார். இந்த ரத யாத்திரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் வழியாக சுமார் 35,000 கி.மீ பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஒரு ரதம், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிக்கு நாளை (பிப்.22) வருகை தர உள்ளது. அதனைத் தொடர்ந்து கும்பகோணம் (பிப்.23 – 25), தஞ்சாவூர் (பிப்.26), அரியலூர் (பிப், 27, 28), பெரம்பலூர் (பிப்.29), முசிறி (மார்ச் 1), குளித்தலை (மார்ச் 2), ஆகிய ஊர்களுக்கு பயணித்துவிட்டு மார்ச் 3 மற்றும் 4-ம் தேதி திருச்சி நகரின் பல்வேறு இடங்களில் வலம் வர உள்ளது. கோவைக்கு நேரில் வந்து ஆதியோகியை தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது. இதுமட்டுமின்றி, இந்தாண்டு கூடுதல் சிறப்பாக கோவை தவிர்த்து தமிழ்நாட்டில் 36 இடங்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை மூலமாக கொண்டாடப்பட உள்ளது. திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தாஜ் திருமண மண்டபத்திலும், பெல் பகுதியில் உள்ள வி.எம். மஹாலிலும் நேரலை ஒளிப்பரப்பு மூலம் இவ்விழா மார்ச் 8-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கொண்டாடப்பட உள்ளது. இதுதவிர, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மயிலாடுதுறை, அரியலூர், நெய்வேலி ஆகிய ஊர்களில் மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்படும். இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் சந்திரன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்