மணப்பாறை, துறையூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 2 மருத்துவர்கள் ‘டிரான்ஸ்பர்’- மருத்துவர் சங்கம் கண்டனம்…!
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் துறையூர் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த மகப்பேறு மருத்துவர்கள் 2 பேரை பணியிட மாற்றம் ( டிரான்ஸ்பர்) செய்து திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார். இதற்கு, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரத்தம் உறையும் தன்மையில் குறைபாடு, கரு வளர்ச்சி தடை, ரத்த தட்ட அணுக்கள் குறைவு, நுரையீரல் பாதிப்பால் இருதயம் செயல் இழந்தது உள்ளிட்ட காரணங்களால் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வெவ்வேறு நாட்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அரசு மருத்துவமனை மருத்துவக் குழு ஆய்வு செய்து, மருத்துவ சேவையில் எவ்வித குறைபாடும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர், சுகாதாரத்துறை மாவட்ட இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகியோர் மகப்பேறு ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்து, இரு மருத்துவமனையின் மகப்போறு மருத்துவர்களை பணியிட மாறுதல் செய்துள்ளனர். இது, மகப்பேறு சேவையில் பின்னடைவை ஏற்படுத்தும். உடனடியாக மருத்துவர்களின் பணியிட மாறுதல் உத்தரவுகளை ஆட்சியர் திரும்பப் பெற வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.