திருச்சி மாநகராட்சியின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையை நிதிக்குழு தலைவர் தி.முத்துசெல்வம் மேயர் மு.அன்பழகனிடம் இன்று(21-02-2024) தாக்கல் செய்தார். அப்போது துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
வரவு-செலவு திட்ட அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
• ஒவ்வொரு வார்டிற்கும் சுமார் ரூ.40 லட்சம் சாலைப்பணிகளுக்கெனவும், ரூ.50 லட்சம் மழைநீர் வடிகால் அமைப்பதற்கெனவும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
• தெருவோர வியாபாரிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு அதனடிப்படையில் கமிட்டி அமைப்பதற்கும், தேர்தல் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி மூலம் தெருவோர வியாபாரிகள், வியாபாரம் நடத்துவதற்கு உரிய பகுதிகளை கண்டறிவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக யானைக்குளம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அப்பகுதியில் செயல்படும் பர்மா பஜார் வியாபாரிகளுக்கென Street Vending Zone அமைத்து வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வழிவகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
• மேலரண் சாலையில் பன்னடுக்கு வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து மேலரண்சாலை வாகனங்கள் நிறுத்தக் கூடாத மண்டலம் என அறிவிக்கப்படும். (தெப்பகுளம் முதல் இப்ராஹிம் பூங்கா வரை)
• ஐந்து வார்டு அலுவலகங்களிலும் இடவசதிக்கேற்ப Food Street அமைப்புகள் உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• மாநகராட்சிப் பள்ளிகளில் இட வசதிக்கேற்ப எல்கேஜி, யுகேஜி வகுப்பிற்கென தனி கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• விடுபட்டு போன மாநகராட்சி மருத்துவமனைகளில் நோயாளிகளை பரிசோதிக்கும் அறையில் குளிர்சாதன வசதிகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
• பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.140 கோடி மதிப்பீட்டில், சுமார் 250 கி.மீ நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்படும் மற்றும் சீரமைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.