5 லட்சம் ஏழை குடும்பத்தினரை கண்டறிந்து வறுமையை ஒழிக்கும் “தாயுமானவர்” திட்டத்திற்கு உயிர் கொடுத்த திருச்சி இளைஞர்…!
சமூகப்பணி மற்றும் மாணவர்களின் நலனுக்காக உழைத்து வருபவர்களுக்கு முதலமைச்சரின் மாநில “சிறந்த இளைஞர் விருது” மற்றும் சான்றிதழோடு
ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 10 ஆண்டுகளாக முழு நேர சமூகப் பணி மற்றும் மாணவர் நலனுக்காக குரல் கொடுத்தமை மற்றும் முதியோர், குழந்தைகள் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் திருச்சியை சேர்ந்த மனிதம் தினேஷ்குமாருக்கு முதலமைச்சரின் மாநிலத்தின் சிறந்த இளைஞர் விருது மற்றும் அரசு சான்றிதழ், தங்கப்பதக்கம் மற்றும் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கரங்களால் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கோட்டை கொத்தளத்தில் இவ்விருதினை வழங்கி பாராட்டினார்.

பின்னர், பல்வேறு துறைகளில் முதல்வர் விருது பெற்றவர்களை தமது இல்லத்திற்கு அழைத்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டியதோடு அவர்களுக்கு மதிய விருந்து உபசரிப்பு அளித்தார். அப்போது அமைச்சர் உதயநிதியிடம், திருநங்கை மாணவர்களின் கல்வி செலவினை தமிழக அரசு முழுமையாக ஏற்பது தொடர்பாகவும், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற தலைப்புடன் முழு வரைவு திட்டத்தினையும் தினேஷ்குமார் சமர்ப்பித்தார். அதனை பெற்றுக் கொண்ட அமைச்சர், இந்த திட்டத்தை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும் என்று உறுதி கூறினார். தற்போது இந்த இரு திட்டங்களும் தமிழக அரசின் 2024 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சிறந்த இளைஞர் விருது பெற்ற மனிதம் தினேஷ்குமார் கூறுகையில், தனது திட்டத்திற்கு உயிர் கொடுத்து செயல்படுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மனிதம் டிரஸ்ட் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.