Rock Fort Times
Online News

மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம் 7,128 பேருக்கு ரூ. 20.17 கோடியில் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சியில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமில் 7,128 பேருக்கு 20.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். மாநிலம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின், ஒளிபரப்பு திருச்சி கலையரங்கத்தில் எல்இடி திரையில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில், அமைச்சர்கள் பேசும்போது, பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் அனைத்து சேவைகளும் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்யும் வகையிலான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டமானது, முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படுவதால், தகுதியான மக்கள் அனைவரும் விண்ணப்பித்து அரசின் திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றனர். விழாவில், பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 7,128 பயனாளிகளுக்கு ரூ.20.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். மேலும், ரூ.65.03 கோடி மதிப்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசுத் துறைகளில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். ரூ.5.68 கோடியில் பணிகள் முடிக்கப்பட்ட 13 புதிய திட்டங்களுக்கான கட்டடங்களையும் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. அபிராமி, மேயர் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் சீ. கதிரவன், அ. சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், எம். பழனியாண்டி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் என பலர் கலந்து  கொண்டனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்