இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், இயேசு உயிர்த்தெழுந்த 3-ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று(14-02-2024) தொடங்கியது. தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதனாக அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி உலகப் புகழ் பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயம், தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா பேராலயம், திருச்சியில் உள்ள புகழ் பெற்ற புனித மரியன்னை பேராலயம், லூர்து அன்னை பேராலயம், பாலக்கரை சகாய மாதா பேராலயம் உள்ளிட்ட திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரில் உள்ள தேவாலயங்களில் இன்று காலை சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தவக்கால சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். திருப்பலியின் இடையே கிறிஸ்தவர்களின் நெற்றியில், பங்குத்தந்தைகளால் சிலுவை அடையாள குறியிடப்பட்டது. இந்த தவக்காலத்தின் 40 நாட்களும் கிறிஸ்தவர்கள் இறைச்சி உண்ணாமல் இயேசு கிறிஸ்துவுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.
தவக்காலத்தின் முதல் வெள்ளி வருகிற 16-ஆம் தேதியும், 23ஆம் தேதி இரண்டாம் வெள்ளியும், மார்ச் 1ஆம் தேதி மூன்றாம் வெள்ளியும், மார்ச் 8ம் தேதி 4ம் வெள்ளியும், மார்ச் 15ஆம் தேதி 5-ஆம் வெள்ளியும், மார்ச் 22ஆம் தேதி 6ம் வெள்ளியும், மார்ச் 24ஆம் தேதி குருத்து ஞாயிறு, மார்ச் 28ஆம் தேதி கடைசி உணவு நிகழ்வு, மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளியும், கடைபிடிக்கப்படுகிறது . மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு உயிர்ப்பு பெருவிழா கொண்டாடப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.