Rock Fort Times
Online News

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து ஒரு நாள் வேலைநிறுத்தம்…!

அகில இந்திய கட்டுனர் சங்கம் அறிவிப்பு

அகில இந்திய கட்டுனர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சியில் இன்று(13-02-2024) நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை காண்டிராக்டர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரிசங்கு, திருச்சி மைய சேர்மன் சுப்பிரமணி, மாநில செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தன், செயலாளர் சிவக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், திருச்சி செயலாளர் நசுருதீன், பொருளாளர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி,
அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன், தமிழ்நாடு நெடுஞ்சாலை காண்டிராக்டர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரிசங்கு ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது :-

ஜல்லி, எம்சாண்ட், கிரஷர் டஸ்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு கட்டுமானங்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசின் கனவு திட்டங்கள் பல முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே, வரும் காலங்களில் டெண்டர்களை தவிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். தமிழகத்தில் ஏறத்தாழ 2000 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே 50 சதவீத கல்குவாரிகள் மூடப்பட்டு விட்டதால் ஜல்லி, எம் சாண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டு மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. எனவே, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்