திருச்சி அருகே இளம் பெண்ணை கல்யாணம் செய்வதாக கூறி குழந்தை பிறந்ததும் தலைமறைவான அசாம் ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் தாரங் மாவட்டம், குருவஜார் பகுதியை சேர்ந்தவர் காதிர்அலி (வயது 22). இவர் திருச்சியில் ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு அதே பழக்கடையில் பணியாற்றி வந்த மண்ணச்சநல்லூரை சேர்ந்த 22 வயது பெண்ணை காதிர் அலி திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவருடன் உல்லாசமாக இருந்தார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் காதிர்அலி அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிட்டு அசாமிற்கு சென்று விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் அசாமிற்கு சென்று காதிர்அலியை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். அவர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.