திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி.கார்னர் பகுதியில் 2 ரயில்வே பாலங்கள் உள்ளன. கடந்த 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தின் இடதுபுறமுள்ள (திருச்சி–சென்னை வழித்தடம் ) ஒரு பகுதியில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் வந்து பழுதடைந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தன.
அப்போது, டி.வி.எஸ்.டோல்கேட்டிலிருந்து செல்லும் சர்வீஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மாடு வதைகூடம் அருகில் பாலத்தின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பாலத்தின் தூண் சற்று கீழே இறங்கியுள்ளது தெரியவந்தது. அதனை, உடனடியாக சீரமைக்க அவர்கள் முடிவு செய்தனர்.
அதனைத்தொடர்ந்து முதல்கட்டமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு நேற்று நள்ளிரவு முதல் பொன்மலை ஜி கார்னரிலிருந்து செந்தண்ணீர்புரம் வரை ஒரு கிலோ மீட்டர் துாரம் வரை வலதுபுற பாலம் மற்றும் சாலையை இருவழிபாதையாக்கி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக அச்சாலை முழுவதும் நடுவில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டன.
மேலும், மதுரை, திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் ஜி கார்னர் முன்பாக வலதுபுறம் பாலத்திற்கு ஏறிச்செல்லும் வகையில் அங்கிருந்த சென்டர் மீடியன்களும், இவ்வாகனங்கள் செந்தண்ணீர்புரம் சென்று இடதுபுறம் சாலைக்கு திரும்புவதற்காக அங்கிருந்த சென்டர் மீடியன்களும் இடித்து அகற்றப்பட்டன. அதேபோன்று, சென்னையிலிருந்து திருச்சி, மதுரை வரும் வாகனங்கள் ஜி கார்னர் சர்வீஸ் ரோட்டில் வந்து ரஞ்சிதபுரம் பஸ் நிறுத்தம் அருகில் திரும்பி பாலத்தில் ஏறும் வகையில் அங்கிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டன. இப்போக்குவரத்து மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் இன்று(12-01-2024) பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள். இப்பணிகள் முடிய பல நாட்கள் ஆகும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பழுதடைந்த பாலத்தை திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.