Rock Fort Times
Online News

தில்லைநகரில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் – நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு.

 

திருச்சி தில்லைநகரில் புதிய சார்-பதிவாளர் அலுவலகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திருச்சி மேற்கு தாலுகாவில் தற்போது திருச்சி கோர்ட்டு அருகில் சார்பதிவாளர் அலுவலகம் இணை எண் 1 மற்றும் 3, உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இதில் இணை எண் 1 சார்பதிவகத்தில் கடந்தநிதியாண்டு 8,486 ஆவணங்களும், இணை எண் 3 சார்பதிவகத்தில் 5,523 ஆவணங்களும், உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11,381 ஆவணங்களும் பதிவிடப்பட்டு உள்ளன. மற்ற சார்பதிவகங்களை ஒப்பிடும்போது இணை எண் 3சார்பதிவாளர் அலுவலகத்தில் குறைவான அளவில் தான் ஆவணங்கள் பதிவாகி உள்ளன.
இணை எண் 1 மற்றும் உறையூர் சார்பதிவகங்களில் அதிக அளவில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுவதால் மக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு இணை எண் 1 மற்றும் உறையூர் சார்பபதிவகங்களில் இருந்து சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக தில்லைநகர் சார்பதிவகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த 22 -8-2022 அன்று கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டு தில்லைநகரில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க திருச்சி மண்டல பதிவு துறை தலைவரால் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த கருத்துருவை பரிசீலனை செய்த தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை தற்போது திருச்சி தில்லைநகரில் புதியதாக சார்-பதிவாளர் அலுவலகம் அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்து உள்ளது. இதற்கான ஆணையை அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்து உள்ளார்.
இந்த அரசாணையின்படி புதிதாக அமைக்கப்படும் தில்லைநகர் சார்பதிவாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செங்குளம், வார்டு ஏடி, வரகனேரி, வார்டு வி, வார்டு யூ, வார்டு ஓ (எச்), வார்டு கே (புத்தூர் வடக்கு), வார்டு இசட் (புத்தூர் தெற்கு), வார்டு இ (புதிய வார்டு எம்), தாமலவருபயம் (புதிய வார்டு எச்), புத்தூர், வார்டு பி (ஜி), வார்டு சி (எல்), வார்டு ஐ, வார்டு ஜே உய்ய கொண்டான் திருமலை, பாண்டமங்கலம் ஆகிய 18 வருவாய் கிராமங்கள் மற்றும் வார்டுகள் இடம் பெற்று உள்ளன. இந்த அலுவலகத்தில் ஒரு சார்பதிவாளர், 2 உதவியாளர் மற்றும் தலா ஒரு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய அலுவலகத்திற்கு வாடகை, அலுவலக தளவாட பொருட்கள், கணினி சாதனங்கள் ஆகியவை வாங்கி கொள்வதற்கான நிதி செலவினங்கள் தொடர்பானவற்றிற்கும் நிதி ஒதுக்கீடு செய்து அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்