திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிநவீன வசதியுடன் புதிய முனையம் அமைக்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமானப் பணிகளை 2019ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இப்பணிகள் அனைத்தையும் 2021 செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக பணிகள் தடைப்பட்டது. இதனையடுத்து அதிக பணியாளர்களை கொண்டு இரவு பகல் பாராமல் பணிகள் மேற்கொண்டதை அடுத்து நிறைவு பெற்றுள்ளது. 134 ஏக்கரில் 75,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த முனையத்தில் நான்கு நுழைவுவாயில், 12 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பயணிகள் வெளியேற 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 700க்கும் மேற்பட்ட கார்கள் இருக்கும் வகையில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக விமான நிலையத்திற்குள் வருவதற்கு 10 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விமான நிலைய புதிய முனையத்தை ஜனவரி மாதம் 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம் அருகே உள்ள வீடுகள் மற்றும் பணியாற்றுபவர்களின் ஒட்டுமொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் நேரம் மற்றும் கலந்து கொள்ள உள்ளவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.