தமிழ்நாட்டில் தற்போது வைரஸ் காய்ச்சல் சற்று வேகமாக பரவி வருகிறது. இதனை உறுதி செய்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் வலியுறுத்தி உள்ளார். இதையடுத்து திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருச்சி உறையூர் பகுதியில் பொது மருத்துவ மற்றும் காய்ச்சல் நோய் தடுப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. உறையூர் குறத்தெரு பகுதியில் மாநகராட்சி சார்பாக நடந்த இந்த முகாமினை மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில் காந்திபுரம் சுகாதார நிலைய மருத்துவர் விமலா மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். இதே போல் காட்டூர், கல்கண்டார் கோட்டை, அரியமங்கலம், காமராஜர் நகர், மார்க்கெட், பொன்மலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இணை நோய்களுடன் வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர். இதில் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுவினர் நேரில் சென்று பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.