காாில் ரத்தம், டிக்கியில் கத்தி, சுத்தியல் – மாயமான ஆசிரியையின் கதி என்ன?
4 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வி-களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் பாலமுருகன். சிவில் இன்ஜினியர். தீபா வேலை பார்க்கும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன். அவருக்கு தீபா, 20 லட்சம் ரூபாய் வரை வட்டிக்குப் பணம் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு தீபா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் நுழைந்த வெங்கடேசன், தீபாவிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால், பணத்தை வெங்கடேசனிடமே திருப்பி கொடுத்துவிட்டு அவரை தீபா திட்டியதாக கூறப்படுகிறது. இதை வகுப்பறையிலிருந்த மாணவ – மாணவிகள் பார்த்துள்ளனர். அன்று மாலை பள்ளி முடிந்து தனது காரில் வீட்டுக்கு புறப்பட்ட தீபா வீடு போய் சேரவில்லை.நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் பாலமுருகன் உறவினர்கள் மற்றும் தீபாவின் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது தீபா மாயமான அதே நாளில் அவருடன் பணிபுரிந்து வந்த வெங்கடேசனும் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து பாலமுருகன் தனது மனைவி தீபாவை காணவில்லை என வி-களத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல, குரும்பலூரைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி காயத்ரி தனது கணவரைக் காணவில்லை என பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இரு காவல் நிலைய போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தீபாவின் கணவர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் இயங்கும் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை பார்வையிட்டார்.
அப்போது திருச்சி சமயபுரம் டோல், மற்றும் மதுரை, தேனி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட சாலைகளில் தீபாவின் காரில் வெங்கடேசன் மட்டும் தனியாக பயணம் செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே காணாமல் போன கார் கோவை உக்கடம் பகுதியில் 3 நாட்களாக நிற்பதாக பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்தக் காரை திறந்து சோதனை இட்டதில் காரில் உள்ள இருக்கை முழுவதும் ரத்தம் உறைந்து காணப்பட்டது. காரின் இருக்கைக்குக் கீழே தீபாவின் தாலிக்காசு மற்றும் தாலிக்குண்டு கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காரின் பின்புற டிக்கியை திறந்து பார்த்த போது அதில் புதிதாக வாங்கிய கத்தி, ரத்த கறையுடன் கூடிய சுத்தியல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைப் பார்த்த போலீசார், தீபாவை வெங்கடேசன் கொலை செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். வெங்கடேசன் எங்கே என்றும் தெரியவில்லை. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவிக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். அவரது உத்தரவின் பேரில் இருவரையும் கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த தனிப்படை போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.