கடந்த 13ம் தேதி திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருமகள் தெருவில் நடந்து சென்ற நபரிடம் கத்தியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி வெற்றி என்கிற வெற்றிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரவுடி வெற்றி குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் மீது திருச்சி மாநகரத்தில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட 5 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 4 வழக்குகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் வழிப்பறி செய்ததாக 5 வழக்குகளும், 2 திருட்டு வழக்குகளும், அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் பணத்தை பறித்ததாக 3 வழக்குகள் உட்பட மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளதாக தெரிய வந்தது.
இதேபோல திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தெருவில் சிறுமிகள் மற்றும் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக ராம்குமார் மற்றும் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெற்றி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் உள்ளவர் என்பதாலும், ராம்குமார் பெண்கள் மற்றும் சிறுமிகளை வைத்து தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் எண்ணம் உள்ளவர் என்பதாலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் உத்தரவிட்டார். அதன்பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 2 பேரிடமும் அதற்கான நகல் வழங்கப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.