Rock Fort Times
Online News

வருங்கால தலைமையை திமுக உருவாக்குமானால் அந்த தலைவரையும் என் தோள் மீது சுமப்பேன்…

திருச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அணிகளுக்கான கருத்துரை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று(28-11-2023) நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-
100 அடி உயர கொடிக் கம்பத்தை முதன்முதலில் இங்குதான் பார்த்தேன். ஆயிரம் கொடிகள் இருந்தாலும் பட்டொளி வீசி பறக்கும் திமுக கொடிக்கு தனி சிறப்புண்டு. நாம் ஊனும், உறவுமாக கருதும் கலைஞரின் ரத்தத்தில் உருவானது திமுக கொடி. சட்டமன்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
எந்த ஒரு குறிப்பும் கையில் வைத்துக் கொள்ளாமல் உரையாற்றியது, வருங்கால திமுகவிற்கு நல்ல ஒரு தலைவன் கிடைத்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. திமுக வில் உனக்கென்று தனி இடம் இருக்கும். ஒட்டு மொத்த திமுக விற்கும் தலைமையாக விளங்கியது திருச்சி தான்.

தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி தான் தலை நகரமாக இருக்க வேண்டும். தொண்டன் தான் கட்சியின் உயிர் நாடி. திமுகவிற்கு வந்த சோதனை போல் மற்ற கட்சிகளுக்கு வந்திருந்தால் அந்த கட்சிகள் அழிந்து காணாமல் போயிருக்கும். திமுக தொண்டர்கள் கட்சியின் காவல் தெய்வங்கள். திமுக ஆட்சி செய்த காலத்தை விட வெளியில இருந்த காலங்கள் அதிகம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி திமுக தான். தற்போதைய திமுக தலைமை வருங்கால தலைமையை உருவாக்குமானால் அந்த தலைவரையும் எனது தோள் மீது வைத்து தாங்குவேன்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகனுக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.

முன்னதாக கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் இரு வர்ண கொடியை அமைச்சர் துரைமுருகன் ஏற்றி வைத்தார்.

இதில் , திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு. மதிவாணன், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் குணசேகரன், பகுதி செயலாளர்கள் மோகன், ஏ.எம்.ஜி. விஜயகுமார், கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், ராஜ் முகமது, மணிவேல் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்