தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் சதாம் நகரை சேர்ந்த ரிஸ்வான் அலி- தஸ்லிமா தம்பதியின் 3 வயது மகன் ஆதிஷ். சம்பவத்தன்று தஸ்லிமா வீட்டில் சமைத்துக் கொண்டு இருந்தார். சிறுவன் ஆதிஷ் தூங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த 3 தெருநாய்கள் திடீரென தஸ்லிமா வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறின. மகனின் அலறல் சத்தம் கேட்டு தஸ்லிமா, நாய்களை விரட்டி அடித்து மகனை மீட்டு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவன் ஆதிசுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிராம்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருவில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.