கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா இன்று (24.11.2023) நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 27.11.2023 கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார். இதையொட்டி சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே இன்று காலை நடைபெற்றது. அதுசமயம் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் கூற புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாாியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.