பிரணவ் ஜூவல்லரி மீது திருச்சியில் மட்டும் ரூ.26 கோடி மோசடி புகார்…
பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. லில்லி கிரேஸ் தகவல்..
திருச்சி -கரூர் பைபாஸ் ரோட்டில், மெகா ஸ்டார் தியேட்டர் அருகில் உள்ள பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடையை திருச்சியை சேர்ந்த செல்வராஜ் மகன் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகிய இருவரும் இயக்குனர்களாக இருந்து நடத்தி வருகின்றனா். திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம், நாகர்கோவில், கோயமுத்தூர் ஆகிய இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. இந்த நகைக்கடைகளில் விளம்பரத் துாதுவா்களாக நடிகா் பிரகாஷ்ராஜ், நடிகைகள் ராதிகா, சைத்ரா ரெட்டி ஆகியோா் உள்ளனா். இந்த நகைக்கடையில் நகை வாங்கினால் செய்கூலி,சேதாரம் இல்லை எனவும், சிறு சேமிப்பு சீட்டுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டன. மேலும், பொதுமக்கள் செலுத்தும் முதலீட்டு தொகைக்கு 3 மாதத்திற்கு 2 முதல் 3 % வரை போனஸாகவும், 6 முதல் 9 மாதத்திற்கு 6% போனஸாகவும், 12 மாதத்திற்கு 9% வரை போனஸாகவும் தருவதாக தெரிவித்திருந்தனர். இதனை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நகைக்கடைகளில் முதலீடு செய்தனர். அந்தவகையில் சுமாா் ரூ.100 கோடி முதல் ரூ.200 கோடி வரை முதலீடாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முதலீடு செய்தவர்கள் அதற்கான முதிர் காலம் முடிந்து பிரணவ் ஜுவல்லரிக்கு சென்று கேட்டபோது பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து உள்ளனர். பொறுத்து பொறுத்து பார்த்த பொதுமக்கள் திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பிரணவ் ஜுவல்லரி நகைக்கடைகளை முற்றுகையிட்டு பணத்தை திருப்பித் தருமாறு வலியுறுத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பொதுமக்களை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடையை அதன் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும் முதலீட்டாளர்கள் செலுத்திய முதலீட்டு தொகையினை வேண்டுமென்றே திட்டமிட்டு வசூல் செய்து தங்களது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி நம்பிக்கை மோசடி செய்த பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள் மதன் அவரது மனைவி கார்த்திகா மற்றும் நகைக்கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாா்களின் அடிப்படையில் திருச்சி உள்பட பிரணவ் ஜுவல்லா்ஸ் மற்றும் அவரது தந்தை, மேலாளா் ஆகியோா் வீடுகளில் போலீசாா் அதிரடி சோதனை நடத்தினா். அப்போது குறைந்த அளவு நகைகளே கைப்பற்றப்பட்டன. மேலாளா் வீட்டில் ரூ.50,000 மட்டுமே இருந்தன. மேலாளா் கைது செய்யப்பட்டாா். மேலும் தலைமறைவாக உள்ள மதன் மற்றும் அவரது மனைவியை போலீசாா் வலை வீசி தேடி வருகின்றனா்.
மேலும், பிரணவ் ஜுவல்லா்ஸ் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் , பல்துறை கட்டிட வளாகம், மன்னார்புரம், திருச்சி என்ற முகவாியில் புகார் கொடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனா். அதன்படி திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேசிடம், ஏமாந்த வாடிக்கையாளர்கள் நேரில் புகார் அளித்து வருகின்றனர். அந்தவகையில் இதுவரை 559 பேர் புகார் அளித்துள்ளனா். புகாாின் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 25.9 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டதாக திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் தொிவித்தாா். இன்னும் ஆயிரக்கணக்கான பேர் புகார் அளிக்காமல் உள்ளதாக தெரிகிறது. அவர்களும் புகார் அளித்தால் இதன் தொகை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.