திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை பஞ்சாயத்தில் 5 பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு திருப்பராய்த்துறை மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த 2000 மாணவ- மாணவிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பஸ்கள் மூலம் வந்து திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையை கடந்து பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். இந்த சாலை திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன. இதனால், ரோட்டை கடந்து செல்ல மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த இடம் தேசிய நெடுஞ்சாலையில் (NH81) உள்ளதால் வேகத்தடை அமைக்க இயலாது. ஆகவே, இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று திருப்பராய்த்துறை பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ்மூர்த்தி, முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரங்கசாமி, ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தங்கராஜ் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலை துறை ஆணையம் மற்றும் மாநில முதன்மை கல்வி அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். மேலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அதன்பேரில், திருப்பராய்த்துறையில் மேம்பாலம் அமைப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ஆலோசனை வழங்கும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை குறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். தற்போது ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன் மூலம் இந்த சாலையில் பேரிக்காடு அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். அங்குள்ள டோல் பிளாசாவில் இருந்து காலை, மாலை நேரங்களில் ஊழியர்கள் வந்து மாணவ- மாணவிகள் சாலையை கடக்க உதவி புரிந்து வருகின்றனர். மேலும், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பள்ளியிலிருந்து 6 ஊழியர்கள் காலை, மாலை நேரங்களில் வந்து மாணவ- மாணவிகளுக்கு உதவி வருகின்றனர். இது தற்காலிகமானது தான். ஆகவே, மாணவ -மாணவிகள் எவ்வித சிரமமும் இன்றி சாலையை கடக்க இந்த இடத்தில் மேம்பாலம் அமைப்பதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி தங்கராஜ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திருப்பராய்த்துறைக்கு கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் போக்குவரத்து கழக அதிகாரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.