Rock Fort Times
Online News

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு...

அக்டோபர் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரோட்டரி மாவட்டம் 3000, கல்வியாளர்கள் சங்கமம், அன்பில் அறக்கட்டளை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய “தனித்திரு ” அறிவால் ஆற்றலால்”என்னும் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு மேடை விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி திருச்சி பட்டர்பிளை சங்கத்தின் தலைவர் சுபா பிரபு அனைவரையும் வரவேற்றார். இதில், தலைமை விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3000ன் முதல் பெண் ஆளுநர் ஆனந்த ஜோதி கலந்து கொண்டு பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கு ரோட்டரி சங்கத்தின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் தொடக்க உரையாற்றினார். ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீபா, கண்களில் ஏற்படும் குறைபாடுகளை குழந்தை பருவத்திலேயே கண்டறிந்தால் பார்வை பறிபோவதை தடுக்க முடியும் என வலியுறுத்தினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு முன்னெடுத்துள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மான்போர்ட் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ராபர்ட் லூர்துசாமி உரையாற்றினார். ரோட்டரி மாவட்டம் 3000-ன் ரைலா திட்டத்தின் சேர்மன் அபுதாலிப், ஜெயம் பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பத்மப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கான தன்னம்பிக்கை மற்றும் வழிகாட்டல் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திக் கொடுத்த முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் இலவசமாக பயிற்றுவித்த பேராசிரியர்களை கௌரவித்து பேசினார். முக்கிய நிகழ்வாக 8 மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், திருச்சி மாநகராட்சி மண்டல 4-ன் தலைவர் மு.மதிவாணன், திருச்சி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளா் செங்குட்டுவன் மற்றும் 8 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் அனைத்து மண்டல செயலாளர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஆளுநர்கள், சங்க தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி பட்டர்பிளை சங்க செயலாளர் பராசக்தி நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்