திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் சிஐடியு ஆட்டோ சங்கம் உள்ளது. இந்த சங்கத்தினை சேர்ந்த சிலர் நால்ரோடு பகுதியில் ஒரு குழுவாகவும், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மற்றொரு குழுவாகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நால்ரோடு பகுதியில் உள்ள ஆட்டோ , டிரைவர்கள், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டிலும் ஆட்டோக்களை நிறுத்தி வந்தனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர்களுக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இது குறித்து சிஐடியு நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் குழுவினர் இந்து முன்னணி ஆட்டோ சங்கம் என்ற அமைப்பில் இணைத்துக் கொண்டு அதற்கான போர்டு வைத்துள்ளனர். இதனை அறிந்த சி ஐ.டி.யு ஆட்டோ சங்கத்தினர் பத்துக்கும் மேற்பட்டோர் இந்து முன்னணி ஆட்டோ சங்கத்தினரை தாக்க முயன்றனர். இதில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையிலும், போலீசார் முன்பு இரு ஆட்டோ சங்க டிரைவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதல் சம்பவம் குறித்து இருதரப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.