தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி ஆற்றில் மாதந்தோறும் தண்ணீர் திறந்து விட வேண்டும், விவசாய விலைப் பொருளுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றி தரக்கோரி கடந்த மாதம் 28 -ம் தேதி முதல் அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அச்சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 11- வது நாளான இன்று ( 07.08.2023 ) டெல்டா பகுதிகளில் கருகும் பயிர்களை காப்பாற்றுவதற்காக காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும், மத்திய அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திருச்சி மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றின் மையப் பகுதிக்கு சென்ற அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், அங்கு உள்ள மணல் திட்டில் உடலை புதைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் விவசாயிகள் எழுந்து வர மறுத்ததால், ஆற்றில் கயிறை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிக்கு சென்ற போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விவசாயிகளை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவராமன் தண்ணீரில் குதித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து வந்தார். பின்னர் காவல் துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிவேதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை , நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்களை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.