ஒண்டிவீரனின் 252-வது நினைவு நாளை முன்னிட்டு ஆதி தமிழர் கட்சி சார்பில் திராவிடம் காக்கும் மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நிறுவனத் தலைவர் ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு அம்பேத்கர் விருது, தந்தை பெரியார் விருது, ஒண்டிவீரன் விருது வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு வீரவாள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து முதல் முதலாக திருச்சியில் மாநாடு நடத்துவது பாராட்டுக்குரியது. இன்று இளைஞர்கள் திராவிடம் காப்போம் என்று வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்து இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளை கவிழ்க்க வேண்டும், அவர்களை விலை பேசி விட வேண்டும் என்று பாரதிய ஜனதாவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்ச்சிகள் நமது முதலமைச்சரிடம் எடுபடாது. எங்களுக்கு கொள்கைதான் முக்கியம் என்று முதலமைச்சர் பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த கட்சியை ஜக்கையன் தலைமையேற்று நடத்துகிறார். யாரையும் இழிவாக பேச வேண்டாம். உங்களுடைய கொள்கைக்காக, இனத்திற்காக, சமுதாயத்திற்காக நீங்கள் போராடலாம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 3 சதவீத ஒதுக்கீடு உங்களுக்கு அளித்துள்ளார். அப்படி தந்தது மட்டும் அல்ல இன்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உங்களுடைய சமுதாயத்தை தனி கவனத்தோடு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். நாங்கள் என்றைக்கும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் மாநில பொருளாளர் சேகர், மாநில துணை பொதுச்செயலாளர் எழில்துரை, மத்திய மண்டல செயலாளர் ஸ்ரீரங்கன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.